| பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம், மக்கள் மீது அடக்குறையை கட்டவிழ்த்து விட்டு வீடுகளை தரைமட்டமாக்கி நடுவீதியில் தள்ளியுள்ளது. ஐ.தே.கட்சிக்கு வாக்களித்தமையினாலேயே இம் மக்களுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது என முன்னாள் எம்.பி.யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார். | |||
| எதிர்வரும் நாட்களில் கொழும்பு நகல் பல இடங்களிலுள்ள வீடுகளை தரை மட்டமாக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கு எதிராக வீதியில் இறங்குவோமென்றும் அவர் தெவித்தார். கொழும்பில் குடியிருப்புக்களை பாதுகாக்கும் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற போதே சபீக் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கொழும்பு கொம்பனித் தெருவில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் ஐ.தே. கட்சி ஆதரவாளர்கள். எனவே, பழிவாங்கும் நடவடிக்கையாகவே வீடுகள் உடைக்கப்படுகின்றன. பல வருடங்களாக சட்டரீதியாக வாழ்ந்த மக்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட விரோதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. எதிர்வரும் நாட்களில் மத்திய கொழும்பு, வட கொழும்பு பிரதேசங்களிலுள்ள வீடுகளை உடைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இதற்கெதிராக நாம் ஓரணியில் திரண்டு வீதியில் இறங்க வேண்டுமென்றும் சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார். நாளை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கொம்பனித்தெருவில் வீடுகள் உடைக்கப்பட்டதை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வேகந்த பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. கொழும்பு குடியிருப்புகள் பாதுகாப்பு மன்றத்தின் ஏற்பாட்டிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக இம் மன்றத்தின் அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஷரப்தீன் கருத்துத் தெரிவிக்கையில்; அரசாங்கத்தின் அடக்குறைக்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இன்று கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுடைப்பு நாளை கொழும்பு முழுவதிலும் வியாபிக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர் வேகந்த பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோமென்றும் அவர் கூறினார். Courtesy : Tamilwin |