மாணவ சமூகம் கல்வித் துறையில் மேம்பாடு காண்கின்ற பொழுது அவர்களது எதிர்காலம் சுபீட்சம் மிகுந்ததாக அமையும் எனத் தெரிவித்த வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும், மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் அதிகூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.
முல்லைத்தீவு மல்லாவி மத்திய மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் பேசுகையில்,
"நாட்டில் நிலவிய அச்சம் நிறைந்த சூழ்நிலை இன்று மாறியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தான் அதனை ஏற்படுத்தியுள்ளது. இனி மீண்டும் ஒரு யுத்தம் நாட்டில் ஏற்படாது. முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எவ்வித அச்சமுமின்றி தமது பணிகளை ஜனநாயகமான முறையில் முன்னெடுக்க முடியும்.
இப்பாடசாலையின் பல்வேறு குறைபாடுகள் குறித்து அதிபர் என்னிடத்தில் எடுத்துரைத்தார். இது தேர்தல் காலம். எனவே அனைத்துக் குறைபாடுகளையும் உடன் நிவர்த்திப்பதாகக் கூறமாட்டேன்.எனினும், பேண்ட் வாத்திய கருவி, ரோனியோ இயந்திரம், போட்டோ கொப்பி இயந்திரம் என்பவைகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
எமது பிரதேசம் அபிவிருத்தி காணும்போது தான் சகல துறைகளும் முன்னேற்றமடைய முடியும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் நாம் பின்தங்கிய நிலையில் தான் இருப்போம். இந்த நிலை மாற வேண்டும். எமது தேவைகளை நாம் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு ஓரணியில் இருந்து செயற்படும் சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது" என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான கனகரட்ணம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Courtsey :muslimguardian