இவைகள் என்ன போர்க்காலத்தின் அடையாளங்களா? குண்டு வீச்சில் அழிந்த பிரதேசங்களா?
நிச்சயமாக இல்லை. மனிதம் மரணித்துப் போனதால் ஒரு சமூகம் வேரோடு பிடுங்கி வீசப்பட்டதால்... இரு மணித்துளியில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வட மாகாண முஸ்லிம்கள் தமது பூர்வீக மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டதால் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கிய இல்லங்கள் இப்படிச் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன.
இவையெல்லாம் நிகழ்ந்து இரு தசாப்தங்களாகி விட்டன. வரலாறு மறக்காத வடுவாக அமைந்து விட்ட அந்தநாளை மறக்க முடியவில்லை. அன்று ஒக்டோபர் 30. பந்துக்களாக வாழ்ந்த நாம் உதைபந்தாடி மகிழ்ந்த ஜின்னா மைதானத்தில் பந்துகளாக உதைத்து விரட்டப்பட்டோம்.
கையிலிருந்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது இடைவழியில் “ஈழத்தைக் கடப்பதற்கு இருநூறு போதும்” என்று அத்தனையையும் அபகரித்து பணமூடைகளாகவும், தங்க நகை மூடைகளாகவும் அபகரித்துச் சென்றதும் அழிக்க முடியாத மனத்தடங்களாகும்.
எதுவுமறியாத பிஞ்சுக் குழந்தைகள் புலிகளைக் கண்டு கையசைத்தபோது கிஞ்சிற்றும் நெஞ்சிலே ஈரமின்றி அவர்களிடமுள்ள மஞ்சாடி நகைகளையும் மிஞ்சாது பிடுங்கிய கொடூரம் என்றும் மறக்கக் கூடியதல்ல.
இரு தசாப்தங்களாக அகதி முகாம்களில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் இப்போது தமது மீள்குடியேற்றம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதியவர்களும் வட மாகாண முஸ்லிம்களின் இரு தசாப்த கால அகதி வாழ்க்கை பற்றியும் அவர்களது மீள்குடியேற்றம் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார். பசில் ராஜபக்ஷ தலைமையில் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் மூலமும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அது மட்டுமன்றி சென்ற வாரம் வடமாகாண முஸ்லிம் மகளிர் அணியினர் ஜனாதிபதியைச் சந்தித்த வேளையில் தமிழில் உரையாற்றிய அவரது வார்த்தைகள் மேலும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளன.
எனினும் கடந்த காலங்களில், சர்வதேச நாடுகளும், அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களும், வடமாகாண முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.
அண்மையில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதிப் போரின் போது புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் மக்கள், இன்று அகதிமுகாம்களில் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களின் துயர் துடைப்பதற்காக சர்வதேச நாடுகளும், சமூக நிறுவனங்களும் முன்வந்துள்ளன. நிச்சயம் அவர்கள் மீது கரிசனை செலுத்தியாக வேண்டும். கடந்த காலங்களில் வன்னியிலிருந்து முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்காக, இலங்கையின் பல பாகங்களிலுள்ள முஸ்லிம் நிறுவனங்களும், முஸ்லிம் கவுன்சிலும் மனிதாபிமான உதவிகளைப் புரிந்த வேளையில் அவர்களுடன் வடமாகாண முஸ்லிம்களும் இணைந்து உதவிகளை வழங்கி வந்தனர்.
அழிந்துபோன மத்ரஸா
புலிகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதும் தமிழ், முஸ்லிம் உறவில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வடமாகாண முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான உறவு மிகவும் புனிதமானது. ஆழமாய் வேரோடிய அவர்களது நட்பு என்றும் அழிக்க முடியாதது. பிரிக்க முடியாதது. புலிகளது நடவடிக்கையால், அவர்களது உறவில் சிறிது கால இடைவெளி ஏற்பட்டாலும், அவர்களது இதயத்தில் எவ்வித இடைவெளியுமின்றி வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள், கட்டித் தழுவி கண்ணீர் விடுகின்ற காட்சிகள்,
அவர்களது மாறாத உறவின் சாட்சிகளாகும்.
எனவே, வன்னி முகாம்களில் வாழும் தமிழ் அகதிகளுக்காக சர்வதேச நிறுவனங்களும், நாடுகளும் உதவுவதை வட மாகாண முஸ்லிம்கள் வரவேற்கின்றனர். எனினும் இரு மணிநேர அவகாசத்தினுள், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், இரு தசாப்த காலமாக அகதி முகாம்களில் படும் அவலங்களை, சர்வதேச நாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. இவர்களின் பார்வையில் வடமாகாண முஸ்லிம்கள் மனித இனமில்லையா? புலிகளின் இனச்சுத்திகரிப்பு இவர்களுக்குப் புரியவில்லையா? மனித உரிமைகள் பற்றிக் கூக்குரலிடும் நிறுவனங்களுக்கு வடமாகாண முஸ்லிம்கள் மீது நடைபெற்ற கொடுமை, இன அழிப்புக்குச் சமமானது என்பது தெரியவில்லையோ?
1948 இல் இன அழிப்பிற்கு எதிரான சாசனம் ஐக்கிய நாடுகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை ஐ.நா. சாசனம் பின்வருமாறு வரையறை செய்கின்றது.
ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது.
ஓர் இனத்துக்கு அல்லது குழுமத்துக்கு வலிந்தும் திட்டமிட்டும் பாரிய உடல், உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது.
சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது.
இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காமல் கொடுமைகள் புரிதல்.
பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை அடையாளங்களை அழித்தல்.
அழிந்த நிலையில் ஒரு வீடு
இச்சாசனத்தின் அடிப்படையில், சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுதலும், பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்புக்குச் சமமான குற்றங்களாகும். இவை இரண்டுமே வடமாகாண முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளும், மனித உரிமை நிறுவனங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பும், இவைபற்றி அறியாதவைகளல்ல.
இதுவரை காலமும் ஐக்கிய நாடுகள் சபையும் வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் கண்மூடித்தனமாகவே நடந்து கொண்டுள்ளது. இந்த வன்னி அகதிகளை மீளக்குடியேற்றும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் ஐ.நா, என்றாவது வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்ற அனுமதிக்கும்படி புலிகளை வலியுறுத்தியுள்ளதா? ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற போர்வையில் முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களைக் கொன்றும், முஸ்லிம் நாடுகளைச் சிதைத்தும் வருகின்ற ஐரோப்பிய நாடுகள், வடமாகாண முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்ச்சியுடனும், துவேஷத்துடனும் நடந்து கொள்கின்றன எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே சர்வதேச நாடுகளும், ஐ.நா. சபையும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் உண்மையான அக்கறையுடன் பேதமின்றிச் செயல்பட வேண்டும் என்பதே வடமாகாண முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.
யாழ்ப்பாணம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அண்மையில் நடந்து முடிந்த மாநகர சபைத் தேர்தல், மீள்குடியேற்றம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதெனலாம். யாழ். மாநகர சபையில் வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஐந்து முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட நான்கு முஸ்லிம் உறுப்பினர்களான சட்டத்தரணி எம். எம். ரமீஸ், எம். எஸ். முஸ்தபா, எம். அஸ்கர் ரூமி, அஸ்பர் அஜ்மயீன் ஆகியோரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்த சுபியான் மெளலவி ஆகிய ஐவர் மாநகர சபையில் அங்கம் வகிப்பதானது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பு நடவடிக்கைகளின் செயற்பாட்டுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சின் இணைப்பாளராக சட்டத்தரணி எம். எம். ரமீஸ் அமைச்சர் றிசாத் பதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாநகரசபை முதலாவது அமர்வின் போது நடைபெற்ற வரவேற்பு விழாவிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் வந்து குடியேறும்படி வேண்டிக்கொண்டார்.
முதலாவது அமர்வின் போது உரையாற்றிய மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ‘1990ல் முஸ்லிம்கள் விரட்டப்பட்டது மிகவும் வேதனைக்குரியதாகும். யாழ். முஸ்லிம்கள் மீளக்குடியேற வேண்டுமென, யாழ். மாநகரசபை சார்பிலும் வடமாகாண தமிழ் மக்கள் சார்பிலும் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
தமிழ்க் கூட்டமைப்பைச் சார்ந்த யாழ் மாநகர சபை எதிர்க் கட்சிக்குத் தலைமைதாங்கும் சட்டத்தரணி ரெமீடியாஸ், “யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்டதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
சமூக நம்பிக்கை நிதியத்தில் நான் கடமையாற்றிய போது புத்தளத்தில் அவர்கள் பட்ட இன்னல்களையும் அறிவேன்.
எனவே அவர்கள் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டு தமிழ் முஸ்லிம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய கனவுகள் நிறைவேற வேண்டும்.
மீண்டும் தமிழ் - முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். சர்வதேச நாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இதய சுத்தியுடன் இம்மக்களுக்கு உதவ வேண்டும்.
Thursday, February 4, 2010
யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கனவு நனவாக வேண்டும்
கூரையில்லாத இறையில்லங்கள், பள்ளிவாசல் பளிங்குத் தரையிலே பற்றைக்காடு... இடிந்த கல்லூரிகள்... அத்திவாரம் மட்டுமே மிச்சமிருக்கும் குட்டிச் சுவராக நாம் வாழ்ந்த மாளிகைகள்.