Saturday, February 27, 2010

"முஸ்லிம் ஒருவரை ஆளுந்தரப்பு சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும் - அமைச்சர் பைசல் முஸ்தபா


கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பொதுத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஆளுந்தரப்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டுமென சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கம்பளை கிறீன் ஹில் மண்டபத்தில் எம்.எம்.நிஸார் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;
பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்படக்கூடாது. ஏனெனில் எனது வெற்றி கண்டி வாழ் முஸ்லிம் சமூகத்தின் வெற்றியாகும்.மத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை. இதற்கொரு காரணம் ஆளுந்தரப்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டதாகும். இதனால் மாகாண அரசில் முஸ்லிம்கள் அரசியல் அநாதையாகினர். இதுபோன்று மற்றுமொரு நிலையேற்படக்கூடாது.

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.சிறுபான்மை,பெரும்பான்மை என்ற எதுவித பேதமும் ஜனாதிபதியிடம் இல்லை. எனவே, அவரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.நாம் அரசாங்கத்தை கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக்கொள்ள முற்படக்கூடாது. எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் பொதுத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஆளுந்தரப்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும்.

மத்திய மாகாண முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் கருதி அரசு மத்திய மாகாணத்தில் முஸ்லிம் கல்விப் பிரிவை உருவாக்கித் தந்தது. இதுபோன்ற பிரிவு வேறு எந்த மாகாணத்திலும் இல்லை. எனவே, ஆளுங்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவரை பொதுத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு உண்டு என்றார்.

-muslimguardian-